இலங்கை சண்டையில் 14 ஆயிரம் தமிழர்கள் தப்பினர்!: புதிய வாழ்வு காண இந்தியா புது திட்டம்

இலங்கை சண்டையில் 14 ஆயிரம் தமிழர்கள் தப்பினர்!: புதிய வாழ்வு காண இந்தியா புது திட்டம்

கொழும்பு: இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் இருந்து 3,000 பெண்கள், 2,800 குழந்தைகள் உட்பட 14 ஆயிரம் பேர் கடந்த நான்கு நாட்களில் தப்பியுள்ளனர்.அதேநேரத்தில், சண்டை தீவிரம் குறைந்ததும், முதல்கட்டமாக ராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் புனர் நிர்மாணம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய அரசு விரும்புகிறது. அதற்கான புதிய திட்டம் மற்றும் வழிமுறைகளையும் வெளியுறவு அமைச்சகம் உருவாக்கி வருகிறது.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை நடக்கும் பகுதிகளில் அப்பாவித் தமிழ்மக்கள் பாதிக்கப்படக்கூடாது என, இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இதனால், அப்பாவித் தமிழர்கள் வெளியேறுவதற்காக, 48 மணி நேர சண்டை நிறுத்தத்தையும் இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது.

புலிகளின் கட்டுப்பாட்டில் 175 சதுர கி.மீ., : இந்நிலையில், இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் இருந்து 3,000 பெண்கள், 2,800 குழந்தைகள் உட்பட 14 ஆயிரம் பேர் கடந்த நான்கு நாட்களில் தப்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,400 பேர் வெளியேறி, பாதுகாப்பான பகுதிக்கு வந்துள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்தது.இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் மேலும் கூறியதாவது:புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி, பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சம் அடைவோருக்கு மருத்துவ உதவிகளும், இதர பல உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.இலங்கையின் வட பகுதியில், தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் 175 சதுர கி.மீ., பகுதி மட்டுமே உள்ளது. அதனால், அப்பகுதியில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகளை ஒழித்துக் கட்ட, ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சண்டை நடக்கும் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை தான், முதல் கட்டமாக ஒரு பிரிவினர் வெளியேறினர். அதன்பின், 13 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் வெளியேறி, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து 17 ஆயிரத்து 900 பேர் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் புலிகள் பிடியிலிருந்த 2.5 லட்சம் பேரில் 7 முதல் 15 சதவீதத்தினர்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், “ஏ-35 சாலையிலும், அப்பாவி மக்கள் மீதும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 120 பேர் பலியாகினர்’ எனவும், புலிகள் ஆதரவு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ராணுவம் முற்றிலும் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடபகுதியில் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் இந்திய அரசு ஆர்வமாக உள்ளது.மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் உட்பட பல விதமான வளர்ச்சித் திட்டங்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளன. அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

இலங்கையின் வடபகுதி பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் மீண்டும் நிற்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.ஆப்கானிஸ்தானிலும் மற்ற சில நாடுகளிலும் இந்தியா பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. அதேபோன்ற பணிகள், இலங்கையிலும் மேற்கொள்ளப்படும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை முடிவடையும் நேரத்தில், இந்தப் பணிகளை மத்திய அரசு துவக்கும்.மேலும், இலங்கையின் வட பகுதியில் தேர்தல் நடத்துவது, அனைத்துச் சமூகத்தினரும் சம அங்கீகாரம் பெறும் வகையில், அதிகாரப் பகிர்வை அமல்படுத்துவது போன்ற அரசியல் ரீதியான பணிகளையும், இலங்கை அரசுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொள்ளும்.கடந்த 1987ம் ஆண்டு நிறைவேறிய இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில், இந்த அதிகாரப் பகிர்வுக் கொள்கை அமல்படுத்தப்படும்.

சமீபத்தில் கொழும்பு பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இலங்கை மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழத்தேவையான அனைத்தையும் இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு செய்யும். போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் விரைவில் ஏற்படும்’ என்றார்.அதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசு பணிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு வெளியுறவுத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

போர் பாதித்த பகுதியில் போப் ஆண்டவரின் தூதர்: இலங்கையில் வன்னி பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள், யாழ்ப்பாணத்தின் வட பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகளாக உள்ள அவர்களை, போப் ஆண்டவரின் தூதர் பிஷப் மரியோ செனாரியோ சந்தித்துப் பேசினார்.”போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலைமை மேம்படுத்தப்படும்’ என்றார்.பின், யாழ்ப்பாண பிஷப் தாமஸ் சவுந்தரநாயகத்தையும் சந்தித்து, அப்பாவித் தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். இருவரும் இலங்கையில் அமைதி நிலவவும், தமிழர்கள் பாதுகாப்பாக வாழவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர்.

இதனை படிக்கும்போது நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

நன்றி தினமலர்! smile.gif

Advertisements

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத்தீ : 65 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் காட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி 65பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்க அந்நாட்டு ராணுவம் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் காட்டுத்தீயை அனைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகரில் உள்ள காடுகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அந்த மாகாணமே தீப் பிழம்புகளால் சூழ்ந்துள்ளது. அந்த நகரே தீயில் உருக்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீசும் கடுமையான காற்று மற்றும் 120டிகிரிக்கும் அதிகமான வெப்பம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிகிறது. இப்பகுதியில் மழை பெய்யாதவரை காட்டுத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

30000 ஹெக்டே பரப்பளவு முழுவதும் தீயின் ஜூவாலையில் சிக்கியுள்ளன. தீ கொழுந்து விட்டு எரிவதால் எழும் சாம்பல் நகர் முழுவதும் பரவியுள்ளது. ஏறக்குறைய 640வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டன. நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால 14000வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா நகரில் மேரிஸ்வில்லி எனும் பகுதி முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இப்பகுதியிலிருந்த 500வீடுகள் முற்றிலும் தீக்கிரையானது. தீயை அணைக்கும் பணியில் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்ரி எரிவது வாடிக்கையான நிகழ்வாகும். ஆனால் 1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு காட்டுத் தீ பரவியது இதுவே முதல் முறையாகும். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில் 75பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமணி!:)

« Older entries