நான் கடவுள் – திரைவிமர்சனம்


இந்த குழந்தை உங்களுடன் இருந்தால் ஆபத்து… இதை பார்ப்பதே பேராபத்து எனும் ஜோதிடர்களின் பேச்சை நம்பி, சிறு வயதிலேயே தன்னால், காசியில் கொண்டு போய் விடப்பட்ட ஆர்யாவைத் தேடி 14 வருடங்கள் கழித்து காசிக்கு வருகிறார் அவரது அப்பா அழகன் தமிழ்மணி. தாடி மீசையுடன் சாமி (கவனிக்கவும்… சாமியார் அல்ல சாமி!) ஆகி விடும் தன் பிள்ளை ஆர்யாவை காசியில் உள்ள பண்டிதர் உதவியுடன் பார்த்த மாத்திரத்திலேயே கண்டு பிடித்து விடுகிறார் தமிழ்மணி!

அதன் பின் அவரது குருஜி மூலம் பேசி, ஆர்யாவை தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் அப்பா. வந்த இடத்தின் தன்னை பெற்றெடுத்த தாயையே அசிங்கப்படுத்தும் ஆர்யா, ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள சாமி கோயிலில் கஞ்சா சாமியார்களுடன் சேர்ந்து கஞ்சா அடித்தபடி பொழுதை கழிக்கிறார். காசியில் கற்ற வேத பாடங்களை தமிழ், இந்தி, சமஸ்கிருதத்தில் உளறியபடி நாட்களை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்களை அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் தாதா கும்பலில் பார்வையற்ற பூஜா சிக்கிக் கொள்ள, அவரது வேண்டுகோளுக்கு இனங்கி தானே கடவுளாகி அந்த குரூப்பின் முக்கிய புள்ளிகளுடன் மூர்க்கத்தனமாக மோதி அவர்களுக்கு நரகத்தையும், பூஜாவிற்கு சொர்க்கத்தையும் காண்பிப்பதே நான் கடவுள் படத்தின் மொத்த கதையும்.

இப்படி ஒரு காய்ந்து போன கதையை எத்தனை நகைச்சுவையாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல முடியுமோ? அத்தனை அற்புதமாக சொல்லி கலர்புல் காட்சிகளாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் பாலா. கதாநாயகிக்கு கண் தெரியாது. பிச்சைக்காரியாக இருக்கிறார். நாயகன் ஆர்யாவோ நீண்ட ஜடா முடி, அடர்ந்த தாடி, அழுக்கு மண்டை ஓடு மாலை, சுடுகாட்டு பூஜை என சுத்த சன்யாசி! அப்பா அழகன் தமிழ்மணி, மொட்டைத்தலை வில்லன் ராஜேந்திரன், அவரது குடிபோதை அடியாட்கள், டோப்பா சுருள்முடி பிச்சை பார்ட்டி சிங்கம் புலி, ஆர்யாவை சாமியாக பூஜாவிற்கு அடையாளம் காட்டும் மலைக்கோயில் சாமியார் கோவை கிருஷ்ணமூர்த்தி, அழுமூஞ்சி அம்மா பாரதி, அழகு ப்ளஸ் அழுக்கு தங்கை புதுமுகம் கீர்த்தனா என முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்ல… பிசசை எடுக்க மொட்டை வில்லன் கோஷ்டியால் துன்புறுத்தப்படும் அனாதைகள், சிறுவனர்கள் என ஆளுக்கு ஒரு உடல் குறைபாட்டுடன் அறிமுகமாகியிருக்கும் 175 புதுமுகங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிச்சைக்கார காட்சிகள் சோக கீதமே வாசித்தாலும்… அதனை படத்தின் கதையோடும், காட்சிகளோடும் பின்ன பிணைத்திருக்கும் இயக்குனர் பாலாவின் மெல்லிய நகைச்சுவை உணர்ச்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும், ஆர்தர் ஏ.வில்சனின் அழகிய ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும், நம்மை படத்தின் காட்சிகளோடும், கதை வசனத்தோடும் கட்டி போட்டு விடுகின்றன.

ஆரம்ப காட்சிகளில் காசியின் ஜனநெருக்கடி மிக்க பகுதிகள், அதன் பின் மலைக்கோயில் பிச்சைக்காரர்கள் அறிமுகம், ரயிலில் பாடி பிச்சையெடுக்கும் பூஜா அறிமுகம், போலீஸ் ஸ்டேஷனில் உல்டா பாடல், உல்டா நடிகர்கள் காமெடி போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய உலகத்தையே படம் பிடித்து காட்டியது என்றால் மிகையல்ல. அதே நேரம் பூஜாவை அடைய துடித்து, பக்கம் பக்கமாக டயலாகக் பேசும் கொடூர மூஞ்சிக்காரரின் போர்ஷனை இன்னும் கொஞ்சம் வெட்டித் தூக்கியிருக்கலாம்.

ஆர்யா சுடுகாட்டு சாமி கால பைரவராகவே சில காட்சிகளில் நம்பை பயமுறுத்துகிறார்… சில காட்சிகளில் பரவசப்படுத்துகிறார். அதிகம் டயலாக் பேசாமல் நிறைய நடித்திருக்கும் ஆர்யாவுக்கு நிச்சயம் இப்படத்தின் மூலம் தேசிய விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்க விருதுகம் குவியலாம். அதே மாதிரி பூஜாவிற்கும், அவரது பிரமாதமான நடிப்பு, விருதுகளை வசப்படுத்தி, வரிசைப்படுத்தலாம். ஆர்யா பூஜா தவிர வில்லன் ராஜேந்திரன், கோவை கிருஷ்ணமூர்த்தி, அழகன் தமிழ்மணி, சிங்கம்புலி, பாரதி, கீர்த்தனா, 175 புதுமுகங்கள் என அனைவருக்குமே பாராட்டு பத்திரமும், விருதுகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் அந்த அளவுக்கு அதட்டி, உருட்டி, மிரட்டி இப்படி நன்றாக வேலை வாங்கியிருக்கும் பாலாவிற்கு <ஒட்டுமொத்த உயரிய விருதுகளையும் மொத்த குத்தகைக்கு விடலாம்.

கால பைரவசாமி மூலம் கர்ண கொடூர இதயங்களை கொன்று குவிப்பதுடன், கருணை கொலைகளையும் துணிச்சலாக ஆதரித்திருக்கும் பாலாவை மனமுவந்து பாராட்டலாம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வித்தியாசத்துடனும், விறுவிறுப்புடனும் வெளிவந்திருக்கும் நான் கடவுள் நல்ல (வசூல்) கடவுள் ஆவது ரசிக கடவுள்களின் கைகளில்தான் உள்ளது!

நான் கடவுள் : பயமும் பரவசமும்

நன்றி தினமலர்! smile.gif

Advertisements

அபியும் நானும் – திரைவிமர்சனம்

அப்பா – மகள் இடையேயான அளவில்லாத பாசமும், அவர்களுக்கு இடையேயான பிரிவுகளும்தான் அபியும் நானும் படத்தின் கதையும் – காட்சிகளும்!

ஊட்டி பக்கம் ஒரு எஸ்டேட் அதிபர் ரகுராமன். மனைவி அனு, மகள் அபி என்று தனக்‌கென ஒரு உலகில் வாழும் ரகு, மகளின் பள்ளிப் படிப்பில் தொடங்கி, கல்லூரி படிப்பு, கல்யாணம் காட்சி வரை… மகளு‌டனான பிரிவுகளை தாங்க முடியாமல் படும் அவஸ்தைகளை காட்சிகளாக்கி சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளாக, தான் பார்க்கில் சந்திக்கும் சுதாகரிடம், தனக்கும் தன் மகள் அபிக்கும் இடையில் இருந்த நட்பையும், நிகழ்ந்த சின்னச் சின்ன பிரிவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ரகுராமன் சொல்வது போன்றே அபியும் நானும் மொத்த படமும் படமாகியிருப்பது விஷேசம்!

பாசக்கார அப்பாவாக… சில சமயங்களில் பைத்தியக்கார அப்பா ரகுராமனாக பிரகாஷ்ராஜ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். மகள் அபியை பிரிகேஜில் சேர்ப்பதற்காக இரவுபகலாக கண்விழித்து படிப்பதில் ஆர்வம் காட்டும் பிரகாஷ் ராஜ், கடைசியில் அப்படியொரு டெஸ்ட்டே வைக்கப்படாததில் காட்டும் வருத்தம், மகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து விட்டு… பின்னாலேயே பயந்தபடி பாலோ – அப் செய்யும் பிரமாதம் என காட்சிக்கு காட்சி பொறுப்புள்ள அப்பாவாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ்ராஜூக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது மாதிரி, மகள் அபியாக த்ரிஷாவும், பிரேம் டூ பிரேம் வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. சைக்கிளில் தனியாக செல்லும் அளவிற்கு வளர்ந்த தன்னை குழந்தையாக நினைத்து காரில் பாலோ பணணும் அப்பாவுக்கு, தான் வளர்ந்து விட்டதை உணர்த்துவதில் ஆரம்பித்து, படிக்க சென்ற இடத்தில் தான் விரும்பிய பஞ்சாப் இளைஞரை அப்பா சம்மதத்துடன் மணம் முடிப்பது வரை எல்லாவற்றிலம் ஓ போட வைக்கும் உருப்படியான மகளாக த்ரிஷா உயர்ந்து நிற்பது பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது.

பிரகாஷ் ராஜூக்கு முன் மகளை புரிந்து கொள்ளும் தாய் அனுவாக நடிகை ஐஸ்வர்யாவும் தன் பங்குக்கு பாடுபட்டுள்ளார். மகள் த்ரிஷாவை புரிந்து கொள்ளும் தாயாக நடித்துள்ள ஐஸ்வர்யா, அம்மா லட்சுமியின் பெயரை இந்த படத்தில் காப்பாற்றியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இவர்கள் தவிர மாப்பிள்ளை ஜோகிந்தர் சிங்காக புதுமுகம் கணேஷ் வெங்கட்ராம், கதைகேட்கும் சுதாகராக பிருத்விராஜ், பிரகாஷ் ராஜின் நண்பர் தாமுவாக தலைவாசல் விஜய், அவர் மனைவியாக ஸ்ரீரஞ்சனி என அத்தனைபேரும் பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

தன் ஆசை மகள் அழைத்து வந்து விட்டாள் என்பதற்காக தெருவோர பிச்சைக்காரனுக்கு பெயர் சூட்டி, தன் வீட்டில் ஒருவராக்கிக் கொள்வதில் ஆரம்பித்து, சர்தாஜி ஜோக் அடித்துக் கொண்டு திரியும் நம்மவர்களுக்கு பிச்சை எடுக்கும் சர்தார்ஜியை எங்காவது காட்டுங்கள் பார்க்கலாம் என குட்டு வைப்பது வரை காட்சிக்கு காட்சி இயக்குனர் ராதாமோகனின் தனித்துவம் முழுக்க வியாபித்து கிடக்கிறது. அதே நேரம் அப்பாவிற்கு பிடிக்கும் என ஒரு விஷயம் காதில் விழுந்ததால், அம்மாவிற்கு தெரியாமல் அப்பாவை அழைத்து சென்று நடு இரவில் நட்ட நடு ஏரியில் படகில் இருந்தபடி மகள் கத்த விடுவதும், அப்பாவின் பர்த் – டேயை கொண்டாடுவதும் டூ-மச்!

மகள் த்ரிஷா, திருமணம் செய்து கொண்டு தன்னை பிரிந்து செல்ல போகிறாள் எனும் காட்சி, அறையில் உள்ள சுவர் சித்திரங்களின் மூலமாக எல்லாம் பிரகாஷ் ராஜின் கண்களுக்கு தெரிவது, பாமர ரசிகனுக்கும் புரியும் படியான இயக்குனரின் கவிதை காமெடி! அதே மாதிரி க்ளைமாக்ஸில் பிரகாஷ் ராஜ் – த்ரிஷா கதையை கேட்டு முடிந்ததும் ப்ருத்வி ராஜ் தன் சின்ன மகளை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சிகளும் இயக்குனரின் இண்டலிஜென்ட்டை எடுத்துரைக்கும்!

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி காட்சி வரை ஏ‌தோ ஏடாகூடமாக நடக்கப் போகிறது… என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியபடி காட்சிகளை நகர்த்தி சென்று அப்படி எதுவும் இல்லாமல் இப்படத்‌ைத இயக்குனர் ராதாமோகன், தனது முந்தைய படமான மொழியை காட்டிலும் பாசிட்டிவ்வாக கொடுத்திருப்பது, வாவ் சொல்ல வைக்கிறது. தனது கதை, திரைக்கதை, இயக்கத்தின் மூலம் இப்படியும் நல்ல சினிமா எடுக்க முடியும் என இந்த படத்தின் மூலமும் நிரூபித்திருக்கும் இயக்குனருக்கு, பெண் ஒளிப்பதிவாளர் பிரீதாவும், பின்னணி இசை மூலம் வித்யாசாகரும் பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர்.

அபியும் நானும் – குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

நன்றி தினமலர்! smile.gif

நானும் பார்த்துவிட்டேன்! மிகவும் அருமையாக உள்ளது! அப்பா என்றால் இப்படி இருக்கனும் என்று பிரகாஷ்ராஜ் நடிப்பில் நிரூபித்துவிட்டாட்ர்!

« Older entries