விநாயகர் சதுர்த்தி பட்சணம்

Posted Image

விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது கொழுக்கட்டைதான். கொழுக்கட்டை என்றாலே அது மிகவும் ஆரோக்கியமான தின்பண்டம்தான். அந்த ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம் சேர்க்க வந்திருக்கிறது புதினா கொழுக்கட்டை. புதினா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மாவு ஒன்று… கொழுக்கட்டை பல:

புதினா கொழுக்கட்டை என்றில்லை எந்தக் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்றாலும் கொழுக்கட்டை செய்ய மாவு அவசியம். இதற்கு நன்கு ஊற வைக்கப்பட்டு களைந்து உலர்த்தப்பட்டு அரைக்கப்பட்ட பச்சரிசி மாவை துணியில் மூட்டை கட்டி ஆவியில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதை நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்ததை கட்டியில்லாமல் மிக்ஸியில் மாவாக்க வேண்டும். அந்த மாவை எந்தக் கொழுக்கட்டை செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதினா கொழுக்கட்டை செய்யலாம்!

புதினா 1 கப் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவுக்குக் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றுடன் கொதிக்கும் நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உளுந்து பெருங்காயம் தாளித்து பிசைந்த மாவில் கொட்டி சிறு சிறு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்க வேண்டும். இப்போது சுவையான புதினாக் கொழுக்கட்டை தயார்.

பூரணங்கள் செய்வது எப்படி?

கொள்ளுப் பூரணம்:

வழக்கமாக பூரணம் செய்ய எள், தேங்காயைப் பயன்படுத்தலாம். அல்லது கொள்ளை வறுத்து நன்கு வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு அதை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து பூரணமாகப் பயன்படுத்தலாம். கொள்ளுவிற்குப் பதிலாக,பாசிப் பருப்பு, காராமணி போன்றவற்றையும் வேக வைத்துப் பூரணம் செய்யலாம்.

பனீர் பூரணம்:

பனீர் 250 கிராம் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலம், சர்க்கரைப் பவுடர், முந்திரி, திராட்சை பொடித்து எல்லாவற்றையும் பூரணமாகப் பயன்படுத்தலாம்.

பழ பூரணம்:

பைனாப்பிளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம், பேரீட்சை எல்லாவற்றையும் மிகவும் பொடியாக வெட்டி அதனுடன் கெட்டியான வெல்லப்பாகு சேர்த்து பூரணம் தயாரிக்கலாம்.

உலர்ந்த பழங்களின் பூரணம்:

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், அத்திப் பழம், அக்ரூட் பருப்பு போன்றவற்றை சிறிது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து அதனுடன் சர்க்கரைப் பவுடர் கலந்து பூரணம் தயாரிக்கலாம்.

மெத்தென்ற அப்பம் வேண்டுமா?

200 கிராம் பச்சரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனுடன் வெல்லம், வாழைப்பழம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்து அரைக்க வேண்டும். அடுப்பில் எண்ணெயைக் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் மாவைக் கரண்டியால் காய்ந்த எண்ணெயில் ஊற்றி வேக வைக்க வேண்டும். மெத்தென்ற அப்பம் தயார்.

:ty: தினமணி

எள் கொழுக்கட்டை

தேவையானவை:

  • எள் – 250 கிராம்
  • வெல்லம் – 150 கிராம்
  • தேங்காய்த் துருவல் – ஒரு கரண்டி
  • அரிசி – 250 கிராம்
  • ஏலக்காய் – 5 கிராம்


செய்முறை:

அரிசியைச் சுத்தம் செய்து ஊற வைத்து நீரை வடிய வைத்து மாவாக்கி ஒரு மணி நேரம் ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறி இறக்கி வைத்து பதினைந்து நிமிடம் மூடிவைக்க வேண்டும். எள்ளை வாணலியில் சிவக்க வறுத்து வெல்லத்தை அதில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கி அதில் எள்ளு பூரணத்தைக் கொஞ்சம் வைத்து மூடி, ஓரங்களை மடக்கி விட்டு இட்டிலித் தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி!

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers