தாய்மார்களுக்கான பயண டிப்ஸ்…

பொதுவாக பயணங்கள் என்றாலே முறையான திட்டமிடல் இருந்தால்தான் இனிமையானதாக அமையும். அதுவும் சிறு குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் அவசியம். எல்லா விஷயங்களிலும் சிறப்பாக திட்டமிடும் ஆற்றலுடைய பெண்களுக்கு சில சிறிய முன்னெற்பாடுகளை செய்து கொண்டால் குழந்தைகளுடன் மேற்கொள்ளும் பயணமும் குதூகலமானதாக அமையும்.

அதற்கு சில ஆலோசனைகள்…

1. நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின் காலநிலைக்கு ஏற்றாற்போல், குழந்தைகளுக்கு ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பமான பகுதி என்றால் பருத்தி ஆடைகளையும், குளிர் பகுதி என்றால் அதற்கு ஏற்ற உடைகளும் அவசியம்.

2. கோடை விடுமுறைப் பயணம் என்றால், முன்னதாகவே டாக்டருடன் ஆலோசித்து குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

3. டிராவல் ஏஜென்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பயணம் என்றால் குழந்தைகளை அழைத்துச் செல்வது குறித்து அவர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது. இப்போது குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை பல ஏஜென்சிகள் செய்து தருகின்றன.

4. பயணத்தின்போது, குழந்தைகளின் ஆடைகளை எளிதில் எடுக்க வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பொம்மைகள், சிறிய விளையாட்டுப் பொருள்களை எடுத்துச் செல்வதும் அவசியம்.

5. எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் திரவ உணவுப் பொருள்களையே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். கூடுதலாக உணவுப் பொருள்களையும், தண்ணீரையும் எப்போதும் வைத்துக் கொள்வது அவசியம். அசைவ உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

6. பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும்போது, ஹோட்டல் அறைகளை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் அறை கிடைக்காமல் அலைவதைத் தவிர்க்கலாம்.

7. சிறிய குழந்தைகளை எப்போதும் தோளிலேயே தூக்கிச் செல்லுங்கள். உங்கள் உடலுடன் குழந்தையின் உடல் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தையின் உடல்நிலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

8. கார்களில் பயணிக்கும்போது, குழந்தைகளை காரிலேயே வைத்துவிட்டு இறங்கிச் செல்லக்கூடாது. முக்கியமாக ஏ.சி.யை ஆன் செய்துவைத்து விட்டுச் செல்லக்கூடாது.

நன்றி: தினமணி! smile.gif

பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்..

சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

* தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

* மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

* புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

* வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

* நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

* தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

*கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே.

நன்றி தினமணி! smile.gif

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers