பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்

Posted Image

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.

* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, <உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

* ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உபயோகிப்பது முதுகு வலி, முட்டி வலி போன்ற பிரச்னைகளைக் கொடுக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கோலாப்பூரி செருப்புகள் போன்ற தட்டையான அடிப்பாகத்தை கொண்ட செருப்புகளை உபயோகிப்பது கால்கள் மூச்சுவிடுவதற்கு வழிவகுக்கும்.

* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும்.

புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.

* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.

* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.

:ty: தினமலர்

தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகள்

Posted Image

ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.

இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.

இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.

தூங்குவது எப்படி?

இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இது’ என்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை. ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்கு நீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.

சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே… போன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே.

:ty: வெப்துனியா

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 30 other followers