பாகம் – 7

கார்த்தி அப்பாவின் மடியிலே அசந்து தூங்கிவிட்டான். பஸ் விட்டு இறங்கும் நேரம் வந்தவுடன் அப்பா கார்த்தியை உசுப்பினார்! அவன் எழுந்திருக்கவில்லை. அவனைத் தோளில்ப் போட்டுக் கொண்டு சைக்கிளை உருட்டிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அப்பாவும் அண்ணாவும் வந்ததைப் பார்த்தவுடன் பிரியாவிற்கு சந்தோஷம். அப்பா… அண்ணா தூங்கிருச்சா! நான் கீழே பாயை விரிக்கிறேன். அதில் அவனைத் தூங்க வைப்பா என்று சொல்லிக் கொண்டே பாயை விரித்தாள் பிரியா. அப்பாவும் பாயில் கார்த்திக்கை மெதுவாக வைத்து தட்டிக் கொடுத்தார்.
அப்பா அப்பா எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க! என்று ஆர்வத்துடன் கேட்டாள் பிரியா… அப்பா உடனே இதோ சாப்பிட பலகாரங்கள் நிறைய வாங்கி வந்துள்ளேன் எடுத்துச் சாப்பிடு என்று வாங்கி வந்த பலகார பொட்டலங்களைப் பிரித்து
பிரியா கையில் தந்தார்.
அம்மாவும் தங்கையும் எங்கே? அவர்களைக் காணோம் என்று வினவினார்.
பிரியாவும் நொறுக்கிக் கொண்டே திண்ணையில் துணியைத் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பா.
பலகாரம் மிகவும் சுவையாக இருக்கு. நான் தங்கையிடம் கொடுத்துட்டு வரேன்ப்பா என்று திண்ணையை நோக்கி ஓடினாள்.
போய்த் தங்கையின் வாயில் பலகாரத்தை ஊட்டினாள்.
அம்மா பிரியாவை நோக்கி, அப்பா வந்துவிட்டாரா! நான் போய் அவருக்கு உணவு கொடுத்துட்டு வாறேன்! அதுவரைக்கும் தங்கச்சி அழ வைக்காம பார்த்துக்கோ என்று கூறிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
பிரியாவும் தங்கையிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போ அண்ணன் கூப்பிடும் சத்தம் கேட்டது.
பிரியா பிரியா எங்கே இருக்கே நான் எழுந்துவிட்டேன். வா உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போறேன் என்று சொல்லிக் கொண்டே திண்ணையை நோக்கி வந்தான். பிரியாவைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அருகில் உட்கார்ந்து கொண்டு ஊரில் நடந்த விஷயத்தை எல்லாம் ஒன்னு விடாமல் கொட்டித் தீர்த்தான். அப்பாவும் உனக்குச் செருப்பு வாங்கித் தருவதாகவும் சொன்னான்.
பரவாயில்லை அண்ணா! இந்தச் செருப்பை போட்டே பழகிவிட்டது. உனக்கு வேணும்னா வாங்கிக்கோ என்று பிரியா கூறினாள். எனக்கு வேண்டாம் செல்லம் உனக்குத் தான் முதலில் பின்பு எனக்கு சரியா என்று செல்லமாகக் கன்னத்தைக் கிள்ளினான்.
இரவு ஆகிவிட்டது நாம் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கினால்த்தான் நாளைக்கு பள்ளிக்கூடம் போகமுடியும் என்று சொல்லி பிரியாவைக் கையிலும் தங்கையை இடுப்பிலும் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று இரவு உணவு முடித்துவிட்டு உறங்கினார்கள் அனைவரும்.
அடுத்தநாளும் வந்தது. பள்ளிக்கூடம் செல்வதற்கு பிரியா தயாரானாள். அண்ணா, அப்பா, அம்மா, தங்கை எல்லோத்துக்கும் டாட்டா காண்பித்து பள்ளிக்கூடத்துக்கு ஓடினாள். இன்று அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.
பள்ளிக்கூடம் மதிய உணவு உண்ண இடைவெளி வந்தது. அப்போது பிரியாவின் செருப்பை போட்டுள்ள அந்தச் சிறுமியும் வந்தாள். வழக்கம் போல் பிரியா அவள் காலைப் பார்த்தாள். பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தாள். அவளுடைய செருப்பை காணோம். அதற்குப் பதிலாக வேறொரு செருப்பு போட்டிருந்தாள் அந்தச் சிறுமி.
உடனே அந்தச் சிறுமியிடம் எங்கே அந்தப் பழைய செருப்பு என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிறுமி அந்தச் செருப்பு பழையதாகி விட்டதால். கீழே போட்டு விட்டு அப்பா இந்தப் புதிய செருப்பு வாங்கிக் கொடுத்தார்.
எப்படி இருக்கு பிரியா? எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! என்று பிரியாவை நோக்கி கேட்டாள் சிறுமி!
ம்……..நல்லாயிருக்கிறது… என்று சோர்வுடன் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அந்தச் சிறுமியும் பள்ளிக்கூடத்திற்குள் சென்று விட்டாள். பிரியா அதை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாள். பள்ளிக்கூடமும் முடிந்தது. கார்த்திக்கு செருப்புக் கொடுக்கணுமே என்று ஓடினாள்.அண்ணனும் காத்துக்கொண்டிருந்தான். பிரியாவின் செருப்பைப் போட்டுக் கொண்டு அவனும் பள்ளிக்கூடத்திற்கு ஓடினான்.
பிரியா மனதிற்குள் அண்ணன் பள்ளிக்கூடம் முடித்துவந்தவுடன் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்..
தொடரும்……….. ![]()
ஆக்கம்: ரதி மகேஸ்வரன். ![]()
